பக்கம் எண் :

593

1979.



நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.  9
1980.



உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.  10


     9. பொ-ரை: பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும்
நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய,
மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து
உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக்
காணாது செல்லல் முறையோ?

     கு-ரை: நல்+தாமரை. முற்றாங்கு-முழுதும் உள்ளபடி. இது பட்டாங்கு.
நல்லாங்கு, பொல்லாங்கு என்பன போல்வது. கற்றார்கள்-‘கல்லார் நெஞ்சின்
நில்லான் ஈசன்’ (தி.3 ப.40 பா.3) என்று மேல் ஆசிரியர் அருள்வதுணர்க.
‘கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்’ (தி.1ப.129 பா.11) ‘கற்றல்
கேட்டல் உடையார்’ என்றதால் நிட்டை முடிய உடையாரை
உபலட்சணத்தாற் கொள்க. பொன்தாம்பு (பொற்றாப்பு) பொன்னூசல். (நன்.411.
சங்கர) தாம்பு-கயிறு. ஊஞ்சலுக்குத் தாம்பு கருவி. தாப்பிசை. வைகாசியில்
ஊஞ்சலாடுந் திருவிழாக்குறித்தவாறு, இப்பாட்டில் ‘உற்றாங்கு’ எனப்பிரித்தது
பொருந்தாது.

     10. பொ-ரை: பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர்,
உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு
பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சுரத்தானுக்கு நிகழும்
நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?

     கு-ரை: உரிஞ்சு ஆயவாழ்க்கை அமண்-உடை ஒழிந்த காரணத்தால்
உரிந்தது போன்று ஆகிய திகம்பரவாழ்வுடைய சமணர். உடையயைப்
போர்க்கும் சாக்கியர் என்றதால், சமணர்க்கு அஃதின்மை குறித்தாரெனல்
பொருந்துமாறறிக. கருஞ்சோலை-பெரிய சோலை.