பக்கம் எண் :

594

1981.



கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.       11

                      திருச்சிற்றம்பலம்


இருளால்கரிய எனலுமாம். எடுத்து உரைப்ப- (தூற்றுமாறு) கொண்டாட.
பெருஞ்சாந்தி-பவித்திரோற்சவம். கும்பாபிடேகம் என்பாருமுளர்.
ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது எளிதன்று. அதற்கீடாகப்
பவித்திரோற்சவமே நிகழ்த்துவதுண்டு. இவ்விழா ஆனி முதலிய மூன்று
திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டுமுழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில்
திருவிழா உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச்
சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் இருபக்கத்திலும் வரும் எட்டு
பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் வேண்டும்.
(சோமசம்புபத்ததி)

     11. பொ-ரை: மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில்
விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது,
தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச்
செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய
இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி
நிலைத்து வாழ்வர்.

     கு-ரை: ‘தேன் அமர் பூம்பாவைப் பாட்டு’ என்பதிலுள்ள பூவிற்குத்
‘தேன் அமர்’ என்று அடைஇயல்பாம். வானசம்பந்தத்தவர்-வீடு பெற்ற
வித்தகர்.

திருஞானசம்பந்தர் புராணம்

மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார் அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.

                                      -சேக்கிழார்.