பதிக வரலாறு:
முத்தமிழ்
விரகர் அடியார்சூழத் திருக்கோபுரத்தை வணங்கித்
திருக்கோயிலை வலம்வந்து வீழ்ந்து தொழுது மெய்ப் பொருள் ஆயினாரை
முக்குளமும் சேர்த்துப் பாடியருளியது சொல்லுதற்கு அரிய இத்திருப்பதிகம்.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
184 |
|
பதிக
எண்.: 48 |
திருச்சிற்றம்பலம்
1982.
|
கண்காட்டு
நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும்
விடைகாட்டுங் கொடியானே. 1 |
1.
பொ-ரை: வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக்
கண் கொண்டவன்; கையில் கனல் ஏந்தியவன்; உமையம்மையை ஒரு
கூறாகக் கொண்ட திருமேனியன் பிறையணிந்த சடைமுடியினன்; பண்ணில்
இறைவடிவானவன்; பயிரை வளர்க்கும் மேகமானவன்; விடைஏந்திய
கொடியை உடையவன்.
கு-ரை:
கண்காட்டும்-நெருப்புக்கண்ணைக்காட்டும். இவ்வாறே
காட்டும் என்பதற்கு முன்னே இரண்டனுருபு (ஐ) விரித்துக் கொள்க.
நுதலான், கையான், உருவான், சடையான், உறைவான் என்பன நுதல்
முதலியவற்றை முறையே உடைமையால் வந்தது. உறைவானென்பது
வினையாலணையும் பெயருமாம். இசையான், புயலான் என்பவற்று
இசைவடிவாயும் புயல் (மேகம்) வடிவாயும் விளங்குகின்றான் என்று கொள்க.
ஏழிசையாய் இசைப்பயனாய், ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்பவை
காண்க. விடை-எருது. கொடியான்-கொடியை உடையான். உம்மை ஏற்ற
பெயர்கள் எழுவாய். கொடியானென்பது பெயர்ப்பயனிலை. (அற்புதத்
திருவந்தாதி. 98.)
|