பதிக
வரலாறு:
சிரபுரத்துச்
செல்வர், பிரிவாற்றாது சாலமிகத் தளர்ந்த
மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறைநாயனாரையும் சிவநெறி போற்றி
இருப்பீர் என்று, தகுவன அருளி, பாண்டிய நாட்டையகன்று,
சோழநாட்டை அணைந்து, தொண்டரினத் தொடும் பலதலம் பணிந்து,
கன்னிமதில் திருக்களரைப் போற்றிப் பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்: 187
பதிக
எண்: 51
திருச்சிற்றம்பலம்
2015.
|
நீரு
ளார்கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில்
விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும்
ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே
அடைந்தார்க் கருளாயே. 1 |
1. பொ-ரை:
நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும்
வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும்
தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில்
ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே!
ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து
நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
கு-ரை:
நீருள் ஆர் கயல் வாவி-என்பது குளங்களின் நீர்
மிகுதியையும் அதிலுள்ள மீன்களின் பெருக்கத்தையும் குறித்தது. திருக்களர்
நீர்வளம், சோலைச்சூழல், வயல் வளம், மதிற்சுற்று, தேர் வீதி, விழாமலிவும்
உடையது. சடையில் மதி ஆர (-நிறைய, பொருந்த) நின்றவனே. அடைந்த
அன்பர்க்கு அருள்வாய் என்க.
|