2019.
|
கொங்கு
லாமலர்ச் சோலை வண்டினங்
கெண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்கு பைங்கமுகம்
புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கை யிற்படையாய்
அடைந்தார்க் கருளாயே. 5 |
2020.
|
கோல
மாமயில் ஆலக் கொண்டல்கள்
சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார்
புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்ட னேநிமிர்
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆல நீழலுளார்
அடைந்தார்க் கருளாயே. 6 |
5. பொ-ரை:
தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள்
மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள்
புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய
மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே!
உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
கு-ரை:
கொங்கு-மணம், பூந்தாதுக்களுமாம், கெண்டி-கிளறி, மாமது -
மிக்க தேன். கமுகம்-பாக்கு. மங்கை. . . மணவாளனே-பார்வதிமணாளனே!
ஒருகைத் தலத்தில் பிணை (மான்) கொண்டு அழகிய (மற்றொரு) கையில்
(மழுப்) படை உடையவனே!
6. பொ-ரை:
அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில்
சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும்
ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய
பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே!
அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
|