பக்கம் எண் :

628

52. திருக்கோட்டாறு

பதிக வரலாறு:

     முத்தமிழ் விரகர் திருநள்ளாற்றை வழிபட்டபோது, திருக்கோட்டாறு
சென்று போற்றிப் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 188                              பதிக எண்: 52

திருச்சிற்றம்பலம்

2026.







கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
     செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின்
     விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
     இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார்
     நெறிசேர்வர் வானூடே.             1


     1. பொ-ரை: கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும்,
அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள
குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில்
வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும்
மாந்தர்கள் வருந்தார். விண்வழியாக வீட்டுநெறியை எய்துவர்.

     கு-ரை: கண்ணின்-கண்ணையுடைய. இசைசெய்ய-(இனிய) இசைப்
(பாக்களைப் பாடலும் ஆடலும்) செய்ய. கார்-மேகம். அதிர்கின்ற
- முழங்குகின்ற. குருந்தம்:-மரம். மாதவி-குருக் கத்திக் கொடி, ‘மாடுலவு
மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் ஊடுலவு புன்னை
விரைதாதுமலி சேருதவி மாணிகுழியே’ (தி.3 ப.77 பா.9) விரை-மணம்.
மல்கு-நிறைந்த. உள்கி-நினைந்து. வருந்தும் ஆறு-துன்பம் அடையும்
வழியை. வான்ஊடு-விண்வழியாகச் செல்லும். நெறி-வீட்டு நெறியை.