2038.
|
நீடல்
கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும்
புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே
அடைந்தார்க் கருளாயே. 2 |
2039.
|
வாளை
யுங்கய லும்மிளிர் பொய்கை
வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம்
புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந்
தவத்தார்க் கருளாயே. 3 |
2. பொ-ரை:
நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர்
ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும்
மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசை
பாடும்புறவார் பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே
மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே!
உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
கு-ரை:
நீடல்-(நீள்+தல்), நீட்சியை உடைய, கோடல்-வெண்காந்தள்.
நிரை-வரிசை. தாது-முல்லைப்பூந்தாதுக்கள். அளம்செய-உப்பளம்போலக்
குவிக்க. இலங்கிய-விளங்கிய, அயல்-பக்கத்தில். மின்-ஒளி. நள்இருள்-
செறிந்த இருளில். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும். சங்கரன்-சுகத்தைச்
செய்பவன்.
3. பொ-ரை:
வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட
வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக
மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ,
நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே!
உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
|