பக்கம் எண் :

644

54. திருப்புகலி

பதிக வரலாறு:

     137-ஆவது பதிகத் தலைப்பிற் பார்க்க.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 190                            பதிக எண்: 54

திருச்சிற்றம்பலம்

2048.







உருவார்ந்த மெல்லியலோர்
     பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
     காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண்
     சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே
     கோயிலாகத் திகழ்ந்தீரே.         1


     1. பொ-ரை: அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே!
தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர்
கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள
அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.

     கு-ரை: உரு-திருமேனிப்பொலிவு. மெல்லியல்-உமாதேவியார். கரு-
‘உருவமைந்த மாநகர்க்குக் கருவமைந்த மாடம்போல’ என்றதில் உள்ள
பொருளே ஈண்டுங் கொள்ளப்படினும், அங்குப் பொருட்கருவும் இங்கு
அருட்கருவும் என்று வேறுபட்டு நிற்கும்.

     பொருஆர்ந்த-மோதுதல் நிறைந்த. புகலி-சீகாழி. கோயிலாக
-தலைமையில்லமாக. கோ-தலைவன், தலைமை தலைவனில்லம் இரண்டன்
வேறுபாடு உணர்க.