2049.
|
நீரார்ந்த
செஞ்சடையீர்
நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலிய
ருழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென்
றணையுங்கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 2 |
2050.
|
அழிமல்கு
பூம்புனலு
மரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர்
கறையார்கண்டத் தெண்டோளீர்
பொழின்மல்கு வண்டினங்க
ளறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே
கோயிலாக விருந்தீரே. 3 |
2. பொ-ரை:
கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த
கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும்
பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே!
போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக்
கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது
இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.
கு.ரை:
நீர்-கங்கை நீர். உழைமான்-உழையாகியமான். புல்வாய் (புலி)
உழை மரையே கவரி, நவ்வியும் உழையும் என்னும் மரபியற்
சூத்திரப்பகுதிகளால் மானின் பேதம் புலப்படும்.
3. பொ-ரை:
மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும்
சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே!
கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த
வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம்
இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
அழி-மிகுதி. அற்றார் அழிபசி. அடைவு-சார்வு. இறை-
நஞ்சின் கறுப்பு. எழில்-அழகு.
|