பக்கம் எண் :

650

55. திருத்தலைச்சங்காடு

பதிக வரலாறு:

     தலைசையந்தணர்கள் எல்லாம் பெருவிருப்பால் வந்து உம்பரும்
வணங்கும் மெய்ம்மை உயர் தவத்தொண்டரோடும் ஆளுடைய
பெருந்தகையாரை எதிர்கொண்டு வணங்கி அழைத்துச்சென்றனர். அங்குற்று,
பெருந்திருமாடக்கோயிலை எய்தி, அருமறைப் பொருளானாரைப் பணிந்து,
அழகிய நல்ல வலம் புரிச்சங்கின் வடிவில் ஓங்கார ரூபமாக ஒளிரும்
இறைவர் சார்ந்து விளங்குமாற்றைப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 191                               பதிக எண்: 55

                      திருச்சிற்றம்பலம்

2059.







நலச்சங்க வெண்குழையுந்
     தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர்
     சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின்
     குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே
     கோயிலாகத் தாழ்ந்தீரே.         1


     1. பொ-ரை: அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும்
அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே!
சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக்
கருதாதவரே! நீர்க் குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய
பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய
தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு.ரை: நலம்-அழகையுடைய, சங்கவெண்குழை-சங்காலான
வெளியகுண்டலம். சங்கை-ஐயம். கமுகின் குலைக்காய் செந்நிறத்ததாதல்
கூறப்பட்டது. தாழ்ந்தீர்-எழுந்தருளியுள்ளீர். தலைச் சங்கை-தலைச்சங்காடு
என்பதன் மரூஉப்போலும்.