2060.
|
துணிமல்கு
கோவணமுந்
தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர்
அண்டர்க்கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூன்மார்பர்
பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே. 2 |
2061.
|
சீர்கொண்ட
பாடலீர்
செங்கண்வெள்ளே றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு
நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூன்மார்பர்
தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே
கோயிலாக விருந்தீரே. 3 |
2. பொ-ரை:
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல்
ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீல மணி
போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே!
நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச் சங்கையில்
விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.
கு.ரை:
மணி-நீலமணிபோலும் நிறம், அண்டர் - தேவர். மாண்பு -
மாட்சி, பெருமை. பிணி - பிணித்தல். அணி - அழகு. நான்கு அடியிலும்
மல்குதல் என்றதற்கு நிறைதல் என்ற பொருளுறப் பொருத்திக்
கூறிக்கொள்க.
3. பொ-ரை:
சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த
கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே!
நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட
மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர்
வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.
|