பக்கம் எண் :

679

2101.







நளிர்பூந் திரைமல்கு
     காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற்
     கோயின்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை
     யுரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத்
     தகுசீர்வானத் திருப்பாரே.     11

                     திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய
ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய
இறைவனை, விளங்கும் தமிழ் மாலையாக உரைத்த பாடல்களாகிய
இவற்றைவல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில்
இருப்பர்.

     கு-ரை: நளிர்-குளிர். திரை-அலை. மல்கு-மிக்க. மேய-மேவிய.
கோமானை-கோமகனை. ஒளிர்-விளங்கும். தமிழ்ப் பூமாலை என மாற்றுக.
தளர்வு ஆன-தளர்வாகிய துன்பங்கள். தான்-தானே. தகுசீர்-தக்கசீர்.
(வினைத் தொகை).

திருஞானசம்பந்தர் புராணம்

பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத் தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.

-சேக்கிழார்.