பக்கம் எண் :

687

2111.







அஞ்சி யல்லல் மொழிந்து திரிவா
     ரமணாதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான்
     கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் றன்னை
     நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம்
     பெறுவாரே.             10


     10. பொ-ரை: அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து
திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும் காலையில் கஞ்சியையுண்டு
திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை
அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனை நினைபவர்கள்
இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்.

     கு-ரை: அல்லல்-துன்பம் தரும் பேச்சுக்களை. ஆதர்-அறிவில்லார்.
காலையிற் கஞ்சி உண்ணும் தேரர் என்று கொள்க.

     அமணரை முற்கூறியதால், உண்பார் என்றது தேரரை என்க. தஞ்சம்-
அடைக் கலம். ‘தஞ்சம்’ (தி.3 ப.78 பா.10) ‘தஞ்சம் என்று உன் சரண்
புகுந்தேன்’ (தி.3 ப.51 பா.6) (தண்+து+அம்) துன்ப வெம்மையால் வந்து
அடைந்தவர்க்குத் தண்மையுடையவரே, அடைக்கலமென்ற போது அபயம்
அளிப்பர். அதனால் தஞ்சம் அடைதல் எனப்பட்டது.

     ‘தஞ்சேகண்டேன்’ (தி.5 ப.50 பா.3) என்று (தண்+து) அம்முப்பெறாது
வருதலும் அறிக. ‘தஞ்ச வண்ணத்தர்’. (தி.4 ப.17 பா.3) ‘அந்தணாளன் உன்
அடைக் கலம் புகுத. . . உன் திருவடிஅடைந்தேன்’ (தி.7)

     ‘தஞ்சமென்று தன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த
காலனை உருள நெஞ்சில் ஓர் உரைதகொண்ட பிரானை நினைப்பவர்
மனம் நீங்ககில்லானை’ (தி.7 ப.96 பா.1). துஞ்சல்-சாதல். நல்லவுலகம்-
பேரின்பவுலகு.