பக்கம் எண் :

688

2112.







ஊழி யாயபாரி லோங்கு
     முயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ்
     சம்பந்தன்
றாழு மனத்தா லுரைத்த தமிழ்க
     ளிவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகின்
     மகிழ்வாரே.                11

                    திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: உலக முடிவில் அழிவதான இம்மண்ணுலகில்
அழியாது மிதந்த உயர் செல்வம் உடைய காழியில் எழுந்தருளிய ஈசனின்
திருவடிகளைப் பேணும் ஞானசம்பந்தன் பணிவான உள்ளத்தோடு உரைத்த
தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான
வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்.

     கு-ரை: ஊழி ஆய பாரில்-உக முடிவு ஆன மண்ணுலகில், ஓங்கும்
காழி-பிரளய வெள்ளத்தால் அழியாமல் மேல் மிதந்த தோணிபுரம். உயர்
செல்வம்-அழியாமல் உயர்ந்த செல்வத்தை உடைய. ‘கழலே பேணும்
சம்பந்தன்’ என்ற பிரிநிலை ஏகாரம், உண்மைச் சைவர்க்குச் சிவபக்தியில்
ஓர் உறைப்பை விளைக்கும். தாழும் மனத்தால்-பணியும் உள்ளத்தால்.
‘வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப் பாழ்படும் அவர்
பாவமே’ (பதி.157 பா.4) தாழும் மனமுடையவரே, ‘கோழம்பத்துறை கூத்தன்
குரைகழல் தாழும் பத்தர்கள்’ ஆவர். ‘தாழ்வெனுந் தன்மைவிட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கு
ஒன்று ஈயகில்லார்’ (தி.7 பதி.79) ‘வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம்
சிறுமை தப்பித் தாழ் வெனுந் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்
பெறலரிது’ (சிவஞான சித்தியார்-181) வாழி-வாழ்ச்சி. இகரம் தொழிற் பெயர்
விகுதி.