பக்கம் எண் :

69

பொருள் காணலும்,

     27. ‘துன்னும் கடல் நஞ்சு இருள் தோய்கண்டர் தொன்மூதூர்’ என்புழி
(பதி.199-1) தொன்மை முதுமை என்ற இரு சொற்களின் தன்மையைவிளக்கி
அழகுற உரையெழுதுதலும்,

     28. ‘தமிழ்க்காழி (பதி.209-5) என்றதால் ஸ்ரீ காளிபுரம் என்றதன் திரிபு
சீகாழி என்ற கூற்று ஆராயத்தக்கது’ என்று குறிப்பாக அது பொருந்தாது
என்றுரைத்தலும்,

     29. ‘மதிலெய்த ஞான்று’ என்பதற்கு மதிலெய்த நாளன்று என்று
நுண்ணிதின் பொருள்காண்டலும், (பதி.222-3)

     30. ‘சொன்னவாறு அறிவார்’ என்பதன் கருத்தை விளக்கிய திறனும்
(பதி.234-1) பகலில் துருத்திவாசமும் இரவில் வேள்விக்குடி வாசமும்
பரம்பொருளுக்கு உண்டு என்று எழுதுதலும் (பதி.234-4)

     31. கலங்கொள் கடலோதம் உலாவு கரைமேல் வலங்கொள்பவர்
வாழ்த்திசைக்கும் மறைக்காடா, என்புழி, திருமறைக் காட்டில் வழிபடும்
முறைமை ஏனையதலங்களினின்று வலம் வருதலின் வேறுபட்டது.
திருக்கோயிலை வலம் வரல் ஏனைய தலங்களில், திருமறைக்காட்டையே
வலம் வருதல் இத்தலச்சிறப்பு என்று பொருள்கண்டுள்ளதும் முதலிய
இடங்களைச் சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியருடைய நுண்ணறிவும்,
உரைநலனும், புதிய பொருள் வகுக்கும் புலமையும், பிறவும் இனிதுவிளங்கும்.

7. தருக்கநூற் புலமை

     வடமொழியிலும் தமிழிலும் உள்ள தருக்க நூல்களை ஒரு சேரக்கற்ற
நம் ஆசிரியர், பொருள் எழுதுங்கால், அவற்றைப் பற்றிய ஐயங்களைத்
தாமே எழுப்பிக்கொண்டு அதனைத் தெளிவாக்கிச் செல்வர்; குறிப்புரையின்
பலர் பகுதிகளில் ஆசிரியரது இவ்வழக்கத்தைக் காணலாம்.,

     எடுத்துக்காட்டாகத் திருவலஞ்சுழிப் பதிகத்து (பதி.138) இறுதியில்,
‘சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக’ என்ற தொடரில் ‘தமிழ்’ என்றது
திருமுறைகளையே குறிக்கும்; பழந்தமிழ்நூல்களையும், தமிழ் மொழியையும்
குறித்ததன்று என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் தாமே விளக்கி
ஐயத்தைத் தெளிவித்துவிடுகின்றார்.