பக்கம் எண் :

706

62. திருமீயச்சூர்

பதிக வரலாறு:

    மண்ணெலாம் உய்யவந்த பண்ணவராகிய சண்பை வேந்தர்,
திருநல்லத்தில் எழுந்தருளிய மாமணியின் சேவடியை இன்றமிழால்
வழிபட்டுத் திருவழுந்தூர்க்குச் செல்லுமிடையில் இத்திருப்பதியை
எய்திப் பாடிப்பணிந்தது இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 198 பதிக எண்: 62

                திருச்சிற்றம்பலம்

2135.







காயச் செவ்விக் காமற் காய்ந்து
     கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த
     பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன்
     றாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை
     வீட்டுமே.                          1


    1. பொ-ரை: அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து,
கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும்
சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய
சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.

    கு-ரை: காயம் - உடம்பு. செவ்வி - அழகு. காமன் - மன்மதன்
(உடலழகையுடைய மன்மதன்). காமற்காய்ந்து-காமனைக் கோபித்து.
இரண்டன்தொகை. படர் புன் சடையில் பாயக்கங்கையைப் பதித்த பர
மேட்டி-படர்ந்த பொன்போலுஞ் செஞ்சடைமேல் விரைந்து பாயும்
வண்ணம் கங்கையாற்றைப் பதியச்செய்த பரமேட்டி. பரமேட்டி-
தனக்குமேல் ஒன்றில்லாத உயர்ந்த இடத்திலிருப்பவன். மாயச்சூர்-
வஞ்சத்தையுடைய சூரபதுமனை. சூர்மாய என்று மாற்றிச் சூரபத்மன்
மாயும்படி என்றலும் பொருந்தும். மைந்தன்-முருகப்பிரான் தாதை-தந்தை
(சிவபிரான்). வீட்டும்-அழிமின். சிவபிரானுடைய மீயச்சூர் என்னும்
சிவதலத்தை வழிபட்டுப் பிறவிக்கு ஏதுவாகிய வினையைத்
தீர்த்தொழியுங்கள் என்று உபதேசித்தருளியவாறு.