பக்கம் எண் :

71

“இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத்
துணையாயிருந்தனன், என்பதில் தேவர்க்கு அன்பன் எனல் பொருந்துமோ?
கண் இமைத்துக் காணாத யோகியர், ‘விழித்தகண் குருடாத்திரி வீரர்
என்பதே உண்மைப்பொருள்’ என்று இறுதியில் உறுதியாக இயம்பியுள்ளமை
எண்ணுந்தொறும் உரைகாரர் உலகுக்கு இறும்பூது பயக்கும் இடமாம்,.

     திருவாக்கூர் தான்றோன்றிமாடப் பதிகத்துக் ‘காரார்பூங்
கொன்றையினான் கதாலித்த தொல்கோயில்’ (பதி.178-2) என்ற விடத்துச்
சிறந்தமுறையிலே ஆசிரியர் உரைகண்டுள்ளார். வேண்டுதல் வேண்டாமை
(விருப்பு வெறுப்பு) அற்ற கடவுளுக்கு இவ்வாறு காதல் உண்டென்ற குற்றம்
தோன்றும் என்று தாமே தடை எழுப்பிக்கொண்டு, பின் அது
பொருந்தாவற்றையும் தாமே, ‘அன்பர்க்கு அன்பன், அல்லாதார்க்கு அல்லன்’
என்புழிப் பக்குவ அபக்குவங்களைக் காரணமாகக் கொள்ளல்போற் கொள்க.
ஆண்டவனுக்கு வேறுபாடில்லை; என்று நிறுவியிருக்கும் அறிவின் திறத்தை
என்னெனப் போற்றுவது!

     ‘கொன்றையான் காதலித்த கோயில்’ என்ற தொடரில் ஆசிரியர்
தம்முடைய நுண்ணறிவால் தடையை எழுப்பி விடைகாண்கின்ற இந்த இடம்,
தொல்காப்பிய மரபியல் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்
கண்டது முதல் நூலாகும்’ என்ற 649ஆம் சூத்திரத்தில், பேராசிரியர்
‘வினையின் என்ற வேற்றுமை, நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமும்
கூறுமாகலின் ஒரு காலத்து வினையின்கண் நின்று ஒருகாலத்து நீங்கினான்
போலக் கூறியது என்னையெனின், என்று தம் நுண்ணறிவுத் திறத்தால்
எழுப்பும் அழகிய தடைப்பகுதி அமைந்த உரைப்போக்கை
நினைப்பூட்டுகிறதன்றோ? இதுபோன்று தருக்கநூல் முறையில் உரை
எழுதுதலே தமிழர் கண்ட உரைநெறியாம்.

திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகத்துத்

'தனைக் கணிமாமலர் கொண்டு தாள்தொழுவாரவர் தங்கள்
வினைப் பகையாயின தீர்க்கும் விண்ணவர்’

     (பதி.205-2) என்புழி, விண்ணவர் என்பதற்கேற்ப முதலில் ‘தமை’
என்று இருத்தல் வேண்டும்; என்று கூறி, ஆசிரியர் திருவாக்கில் அமைதி
காண்பாராய், ஒருமைக்கும் பன்மைக்குமுரிய கடவுளைக் கூறலின்
குற்றமாகாது? என்று அழகுபெறக் கூறியுள்ள இடம் நெஞ்சை அள்ளும்
தீஞ்சுவை மிக்கது. 85