பக்கம் எண் :

72

8. மாறுபாடுநீக்கும் மாண்பு:

     மாறுபாடு தெரிந்து கொள்ளவேண்டிய சொல்வழக்குகள் ஆங்காங்கு
ஆளப்படும்போது, அவற்றைத் தெளிவாக்கி ஐயம் போக்குவதும் ஆசிரியர்
வழக்கமாகும். உதாரணமாக, உணவும், இரையும் வெவ்வேறு என்பதனை
(பதி.137-5) யும்,‘ஈசன் இந்திர நீலபர்ப்பதம், கூசி வாழ்த்துதும் குணமதாகவே’
என்ற சம்பந்தர் திருவாக்கிலுள்ள கூசுதலும், ‘நேசம் தன்பால் இல்லாத
நெஞ்சத்து ஈசர் தம்மைக் கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்சே’ என்ற
அப்பர் திருவாக்கிலுள்ள கூசுதலும் வேறு வேறானவை என்பதனை (பதி.163-
4)யும், குழையும் தோடும் வெவ்வேறானவை என்பதனை (பதி.164-2)யும்,
மறை எனப்படுவதும் வேதம் எனப்படுவதும் வெவ்வேறாக விளங்குபவை
என்பதனை (பதி.170-9)யும், தேய்ந்து மலியும் பிறையும் சிவபெருமான்
திருமுடிமேற் பிறையும், வேறானவை என்பதனை   (பதி.181-2)யும்
ஆர்திரையான் என்பதும் ஆதிரையான் என்பதும் ஒரு பொருளவே
என்பதனை (பதி.183-4)யும், உவகை என்பதே உகவை எனப் புள்ளி மாறி
நின்றது என்பதனை (பதி.196-7)யும், தொன்மையும் முதுமையும் வெவ்வேறு
தொல் பொருள் உடையன என்பதனை (பதி.199-1)யும், ஆசிரியர் அழகு
பெற விளக்கிச் சிந்தனையில் ‘அதுவோ இதுவோ’ எனத்தோன்றும்
ஐயங்களை அறுத்து, மாறுபாடு நீக்கியுள்ள மாண்பு சொல்லுந் தரத்ததன்று.

9. பதசாரம் எழுதுதல்:

     பழைய இலக்கியங்களுக்கு உரைகண்ட அறிஞர்கள் பதசாரங்
காண்பதனை ஒன்றாகக் கொண்டிருந்தனர். சொல்லின் சாரத்தைப் பிழிந்து
வடித்துப் பயில்வோர்க்குத் தரப்படுவதே பதசாரம். நம் ஆசிரியரும் தம்
குறிப்புரையில் ஆங்காங்குத் தேவைப்படும் இடங்களில் அழகாகப் பதசாரம்
தந்துள்ளார்.

     எடுத்துக்காட்டாகச் சில இடங்களை ஈண்டுக் குறிப்போம்;
திரிகரணங்களாலும் ஆகும் வினைகளை அத்திரிகரணங்களாலும் தீர்க்கும்
வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை, முதலியவை அவற்றுள்
தியானமே உத்தமமாகலின் ‘உள்க வல்லார் வினை ஒழியும்’ என்று
அருளினார். (பதி.150-5)

     ‘வெள்ளத்தில் மிதந்த வரலாறுபற்றிக் ‘கடலார் வேணுபுரம்’ என்றார்.
(பதி.153-1)