பக்கம் எண் :

73

     காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன்பட்டுக் கடலிற் சேர்வது
மிகச் சிறிதேயாகலின் பாயும் என்னாது “மேவும்” என்றார் (பதி.174-1)

     இன்னோரன்ன பல இடங்களில் ஆசிரியரது பதசாரம் எழுதும்
மாண்பு நமக்குப் புலனாகிறது. இதன்மூலம், தேவாரத்தைப் பாடியருளிய
சமயசாரியரது திருவுள்ளம் எப்படியிருந்திருக்கும் என்ற நல்ல சிந்தனைக்குரிய
நல்லெண்ணம் உருவாகிற தன்றோ?

10. இலக்கியப்பயிற்சி:

     உரையாசிரியரின் இலக்கியப் பயிற்சியை அவர் உரையில் கையாளும்
இலக்கியப் பகுதிகளாலும், இலக்கியப் பகுதிகளை உரை நடையாக எழுதிக்
காட்டிச் செல்லும் இடங்களாலும் அறியலாம். சங்க இலக்கியங்களில் புறம்,
அகம், கலி, குறுந்தொகை, பரிபாடல் முதலியவையும், சித்தாந்த
சாத்திரங்களில் சித்தியாரும், முத்தி நிச்சயமும், சோமசம்புபத்ததி,
சிவதருமோத்தரம், சிவஞான போதச்சிற்றுரை முதலியவையும், திருமுறைகளில்
ஏனைய திருமுறைகளிலிருந்து எடுத்தாளப்படும் ஒப்புமைப் பகுதிகள்
முதலியனவும் ஆசிரியரின் இலக்கியப் பயிற்சியைக் காட்டும்
ஆதாரங்களாகும்.

     உரை காண்பது என்பது ஒரு கலை, ஆழ்கடலிலே மூழ்கி அழகு
முத்தை எடுத்து அவனிக்கு முன்னே அணிபெற வைப்பது போன்ற
அருங்கலை அது. பரந்து ஆழ்ந்த இலக்கியப்பயிற்சியும், இலக்கணப்
புலமையும், நுண்மாண் நுழை புலமும் உடையார்க்கன்றிப் பிறர்க்கு அது
வாய்க்காது என்பதனைத் தெளிவாக்குகிறது. ஆசிரியரின் அழகுபொதிந்த
குறிப்புரை.

11. நன்றிமறவா நன்னயம்:

     செய்ந்நன்றி மறவாமை செந்தமிழ் நாட்டின் விழுமியபண்பு.
நன்றிமறக்கும் முடத்தெங்குகளை நம் நாட்டில் எங்கும் காண இயலாது.
அதனாலன்றோ வள்ளுவரும் இதனை ஒரு அதிகாரப் பொருளாக்கினார்!
கம்பன் தன்னையாதரித்த சடையப்பரைத் தன் கவிதையில் வைத்து
வாழ்த்திசைத்தான்!சங்ககாலக் கவிஞர்கள் தம்மை ஆதரித்த பெருமன்னரை
-அவர்தம் நாட்டை-உவமையின் வாயிலாகவும், பிறவாறாகவும் எடுத்துப்
பலபட ஏத்தித்தம் நன்றி மறவா நன்னயத்தை நன்கு புலப்படுத்தினர்! இந்தக்
கவிஞர் மரபிலே-பொய்யடிமை இல்லாப் புலவர் குழுவிலே- திகழும் நம்
உரையாசிரியரும் தம்நன்றி மறவா நன்னயத்தை நன்கு புலப்படுத்தியுள்ளார்.