பக்கம் எண் :

715

63. திருவரிசிற்கரைப்புத்தூர்

பதிக வரலாறு:

     காழிவேந்தர் அரதைப்பெரும்பாழி முதலாகத் திருச்சேறை, திருநாலூர், திருக்குடவாயில், திருநறையூர் என்னும் தலங்களை வழிபட்டு வந்தபோது இத்திருப்புத்தூரை நயந்து இறைஞ்சிப் புனைந்து இறைவன் திருவடிக்குச் சாத்திய நீடு தமிழ்த் தொடையாகும் இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 199   பதிக எண்: 63

                   திருச்சிற்றம்பலம்

2146.







மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள்
     விளங்கவே
துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர்
     தொன்மூதூர்
அன்னம் படியும் புனலா ரரிசில்
     அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
     கரைமேற் புத்தூரே.                1



     1. பொ-ரை: மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை
விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத்தராய்
விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை
உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியையும் கொண்டு வீசும்
தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும்.

     கு-ரை: சடைமேல் திங்கள் விளங்க (இருள்) தோய்கண்டார் என்று
இயைக்க. சடைமேல் வெள்ளொளியும் கழுத்தில் காரிருளும் ஆக உள்ள
முரணும் புலப்படக்கூறியவாறு. விளங்கத்துன்னும் என்றியையாது. துன்னுதல்-
(நெருங்குதல்) கடலின் வினை. தோய்தல்-இருளின் வினை. திங்கள் விளங்க
இருள் தோய்ந்தது. திங்கள் பகலின் விளங்காதன்றோ? இருளின் தோய்வு
திங்களின் விளக்கத்திற்கு இன்றியமையாதது. கழுத்திலுள்ள காரிருள்
சடைமேலுள்ள திங்கள் விளக்கம் நன்கு தோன்றத் துணையாயிற்று. கடல்
நஞ்சு இருள்-பாற்கடலின் எழுந்த நஞ்சினாலான கறுப்பு. அன்னம்- பறவை.
ஆர்-நிறைந்த.