அரிசில்-அரிசிலாறு
பொரு-மோதுகின்ற. தென்கரைமேல் உள்ள புத்தூர்.
தொன்மூதூர் புத்தூர் என்க. தொன்மை, முதுமை இரண்டும் ஒருங்குவரல்
அறியத்தக்கது. தொன்மை காலத்தைப்பற்றியது. முதுமை அக்காலத்தோடு
அதில் நிகழும் வளர்ச்சியையும் பற்றியது. தோன்றி நெடிது நிலை
பெற்றுவருவது தொன்மைக்கும் முதுமைக்கும் உரியதாகும். முன்னொருகால்
தோன்றியிருந்து அழிந்த பொருளை நெடுங்காலங் கழிந்த பின்னர்த்
தொல்பொருள் எனலாம். முதுபொருள் எனலாகாது. காலத்தின் நெடுமையும்
இடத்தின் நீட்சியும் தொன்மை எனும் வழக்கிற்கொவ்வும். தொல்லோன்,
தொலைந்தான், ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று
இவ்வுலகத் தியற்கை (புறம்-86). தொலைவு, தோல்வி, தொல்லை
என்பவற்றை ஆராய்க. முன்னொருகால் தோன்றியிருந்த குழந்தையைப்
பின்னொரு கால் தொல்குழந்தை எனலாம். முது குழந்தை எனலாகாது.
கிழவனே தொல்லோன் முதியோன் எனலாம். பல நீர்மை குன்றிச்
செவி. . . நரை தோன்றும் காலம் (தி.1 ப.59 பா.6) என்றதிற் குறித்த
முதுமை, நெடுங்காலமாக உள்ளனவும் காலம் அல்லாதனவும் ஆன பிற
பொருள் இடம் முதலியவற்றில் இல்லை. அவற்றில் தொன்மையே உண்டு.
திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் தொல்லோர் ஆவரேயன்றி,
முதியோராகார். திருநாவுக்கரசரோ தொல்லோருமாவர்; முதியோருமாவர்.
தொன்மையைப் புராதனம் புராணம் முதலியவற்றாலும் முதுமையை
வார்தக்யம், விருத்தாப்பியம் முதலியவற்றாலும் வடமொழியிற் குறிப்பர்.
புராதனமும் விருத்தாப்பியமும் ஒன்றாகா. தொன்மூதாலத்துப் பொதியில்
என்ற குறுந்தொகை 15உம் தொன் மூதாலம் என்ற நெடுந்தொகை 70,
251உம் இக்கருத்தில் உரைக்கப்பட்டனவோ? அவற்றின் உரைகளைக்
காண்க. யாண்டு முதுமை ஆண்டுத் தொன்மை எனலாம்.
யாண்டுத்தொன்மை ஆண்டு முதுமை எனல் ஒவ்வாது.
இப்பாட்டில்,
தொன்மூதூர். . . புத்தூரே என்று முரண்டொடையாய்
அமைந்த நயம் அறிந்து மகிழ்தற்பாலது. புதுமையும் தொன்(பழ)மையும்
ஒன்றற்கு ஒன்று மறுதலை, இளமையும் முதுமையும் ஒன்றற்கொன்று
மறுதலை. தொன்மைக்கு இளமையும் முதுமைக்குப் புதுமையும்
மறுதலையாகா. நெடுங்காலமாக உள்ள வெற்றிடத்தைத் தொன்மையது
எனலாம். அங்குத் தோன்றி நெடுங்காலமாகவே இருக்கும் ஒன்றனை
முதுமையதெனலுமாம். ஆகவே, தொல்மூதூர் என்றதற்கு மிகப் பழைய
ஊர் என்று பொருள் கோடல் குற்றமாம்.
|