பக்கம் எண் :

727

2159.







நீடு மலரும் புனலுங் கொண்டு
     நிரந்தரம்
தேடு மடியார் சிந்தை யுள்ளே
     திகழ்வானைப்
பாடுங் குயிலி னயலே கிள்ளை
     பயின்றேத்த
மூடுஞ் சோலை முகிறோய் கோயின்
     முதுகுன்றே.                       3


     கு-ரை: எந்தை-என் அப்பன், (தந்தை-தன் அப்பன், நுந்தை-நுன்
அப்பன் என்பது பழைய வழக்கு). இவன் எந்தை-இவனே (சிவபிரானே)
என் அப்பன், என்று இறைஞ்சுவார் சிந்தை யுள்ளே திகழ்வானை மந்தி
மலர் கொண்டு வணங்குங்கோயில் என்க. கிரியா விதிப்படி சிவபூஜை
செய்வோர் முதலில் சூரிய பூஜை செய்வாராதலின் ‘இரவிமுதலா
இறைஞ்சுவார்’ என்றார். இறைஞ்சுவார்-வினையாலணையும் பெயர். இரவி-
சூரியன். திகழ்வான்-‘ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க
வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி’. மந்தி-குரங்கு. ஈண்டு இனத்தைக்
குறித்தது. குரங்குகளும் மலரினம் பல கொண்டு மக்கள் தொழுவதற்கு
முந்தி வழிபடும் சிறப்பு உணர்த்தப்பட்டது. இது சிவபூஜை செய்யாத
மாக்களை நாணுறுத்தும்.

     3. பொ-ரை: மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு
எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும்
இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச்
சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது
முதுகுன்றாகும்.

     கு-ரை: நீடு-மிகுதி. நிரந்தரம்-எப்பொழுதும். தேடும்-ஆராயும்.
“தேடிக்கண்டு கொண்டேன்” (தி.4 ப.20 பா.10) “திருமாலொடு நான்முகனும்
தேடித்தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்”.
(தி.4 ப.5 பா.12) “ஓட்டற்று நின்ற உணர்வு பதி முட்டித் தேட்டற்று நின்ற
இடம் சிவமாம்-நாட்டற்று. நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத்
தேடுமிடமன்று சிவம்” (திருக்களிற்றுப்படியார். 5.29) கிள்ளை-கிளி. பயின்று-
பழகி. ‘மூடும். . . குன்று’-மலையைச் சோலையும் முகிலும் மூடியிருக்கின்றன.
மூடுதல்-பொதுவினை. தோய்தல்-முகிலின் (சிறப்பு) வினை.