பக்கம் எண் :

728

2160.







தெரிந்த வடியார் சிவனே யென்று
     திசைதோறும்
குருந்த மலருங் குரவி னலருங்
     கொண்டேந்தி
இருந்து நின்று மிரவும் பகலு
     மேத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை
     முதுகுன்றே.                    4
2161.







வைத்த நிதியே மணியே யென்று
     வருந்தித்தம்
சித்த நைந்து சிவனே யென்பார்
     சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக்
     கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின்
     முதுகுன்றே.                    5


     4. பொ-ரை: அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும்
நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி
அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும் விட்டு விட்டு
மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.

     கு-ரை: தெரிந்த - சிவபிரானே வழிபாட்டிற்குரியவனாகி
வீடுபேறளிக்க வல்லவன் என்று ஆராய்ந்து அறிந்த. குருந்தம் என்னும்
மரங்களின் மலர்களைக்கொண்டு நின்றும் இருந்தும் இரவும் பகலும் ஏத்தி
வழிபடும் சீரையுடைய முதுகுன்று. முரிந்து - மேகங்கள் வளைந்து. மேகம்
முரிந்து தவழும் சோலையையுடைய முதுகுன்று.

     5. பொ-ரை: சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே!
மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம்
சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர்
சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக்
கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய
அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.