பக்கம் எண் :

760

2201.







அரவினொ டாமையும் பூண்டு
     வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல்
     வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற்
     பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய
     வின்ப நமக்கது வாமே.              2


     2. பொ-ரை: பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு,
அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய
வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப் பரவப் பெறும் சிறந்த
கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று
அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.

     கு-ரை: அரவு - பாம்பு. ஆமை:- ‘முற்றலாமை இளநாகமோடு
ஏனமுளைக் கொம்பவைபூண்டு’. அம் துகில் வேங்கை அதள் - அழகிய
புலித்தோலாகிய ஆடை. முடிமேல் திங்கள் சூடி விரும்பிப் பரவுங் கடம்பூர்
என்க. அம்பிகைக்குரிய துகிலும், அரனுக்குரிய அதளும் விரவும் (-கலக்கும்.)
எனலுமாம். பரவும் - எழுந்தருளிய. சூடிவிரும்பி எழுந்தருளிய கடம்பூர்
என்று கொள்ளாக்கால், வினைமுடிபு பொருந்தாது.

     பரவுதல்-வாழ்த்துதல், துதித்தல் என்று பொருள்படுதல் ஈண்டுப்
பொருந்தாது. இதில், சூடுதலும், விரும்புதலும், பரவுதலும் இறைவன்
வினையாதல் வேண்டும். சூடி என்பதைப் பெயராகக் கொண்டு கூறலாம்.
எனினும், பூண்டு சூடி விரும்பிப் பரவும் என்று தொடர்தலால் இடையில்
ஒரு வினையெச்சத்தைமட்டும் பெயராக் கோடல் யாங்ஙனம்? அதளும்
விரவும் முடி எனல் விளங்கிற்றிலது. பைங்கண் வெள்ளேறு-பசிய
கண்களையுடைய வெள் விடை. ஏற்றண்ணல்-எருதூரும் பெருமானார்.
இரவும் பகலும் பாதம் பணிய நமக்கு இன்பமது ஆம் என்க. விரும்பிச்சூடி-
அதளும் விரும்பி என்று பொருத்தினும் பொருந்தல் இல்லை. அதளும்
விரவும் திருமுடி என்று கொண்டு அரையில் உடுத்த புலித்தோல்
முடியையும் மறைத்துச் சுற்றியிருந்ததோ என்று எண்ணுவாரும் உளர்.