பக்கம் எண் :

771

2213.







சடையமர் கொன்றையி னாருஞ்
     சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
     பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
     வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           3
2214.







நறைவளர் கொன்றையி னாரு
     ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்
     காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு
     மணமுழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           4


     3. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை
தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை
உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர்.
விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப்
படைக்கலன்களாக உடையவர்.

     கு-ரை: சாந்தம் வெண்நீறு - ‘சாந்தமென நீறணிந்த சைவர்’
(தி.2 ப.71 பா.8) புடை - பக்கம். பூதத்தினார் - பூதகணங்களை உடையவர்.
பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் - கட்டியவர்.
விடை - எருது. கொடியார் - துவசம் ஏந்தியவர். இடபத்துவசம்
உயர்த்தியவர். மழுவும் மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் -
விரும்புங் கோட்பாடுடையவர்.

     4. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய
கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க
நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக்
கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல்,
மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.