2221.
|
கலமல்கு
தண்கடல் சூழ்ந்த
காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி
பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ்
சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி
நன்னெறி யெய்துவர் தாமே. 11
திருச்சிற்றம்பலம்
|
11. பொ-ரை:
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல்
சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க
வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப்
பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை
நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.
கு-ரை:
கலம் -
மரக்கலம். கடலில் தோணியாக மிதந்த
காழியாதலின், கடல் சூழ்ந்தகாழி என்றார். பலம் - பயன், வலிமையுமாம்.
தலை - பிரமகபாலம். சொல - சொல்ல, பாட. சொல்லச் சொல்ல மல்கும்
பாடல்கள். நலம் - பேரின்பம். நன்னெறி -ஞானமார்க்கம்.
| திருஞானசம்பந்தர்
புராணம்
அப்பதி
யின்கண் அமர்ந்து சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம் பலவுந் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக் கொடுமுடி சென்றணைந்தார்.
-சேக்கிழார்.
|
|