பக்கம் எண் :

785

 71. திருக்குறும்பலா

பதிக வரலாறு:

     சிரபுரத்து வந்தருளும் செல்வர் சிலநாளிருந்து திருப்புத்தூரை
வழிபட்டு; பூவணத்தைப் போற்றிக் கானப்பேரைக் கைதொழுது சுழியலை
வணங்கிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டேத்தியது இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 207   பதிக எண்: 71

திருச்சிற்றம்பலம்

2234.







திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து
     தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல்
     புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின
     வண்டியாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
     குறும்பலாவே.                    1


     1. பொ-ரை: பிறைமதியை அழகுறப் புனைந்து, கங்கையைச்
சடையில் கரந்து உமாதேவியை இடப்பாகமாக கொண்டு, பொருந்தாத
வேடத்தோடு இடுகாட்டில் உறைதலை விரும்பிய செல்வர் எழுந்தருளியுள்ள
இடம் யாதென வினவில், ஏல மணம் கமழ்வதும், சோலைகளில் வண்டுகள்
யாழிசை போல ஒலிக்கக் குருந்தமரம் மணம் வீசும், குன்றுகள் அருகே
சூழ்ந்துள்ளதுமான குளிர்ந்த சாரலை உடைய குறும்பலாவாகும்.

     கு-ரை: திருந்தச் சூடிக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தால்
உறைதல்புரிந்த செல்வர் என்று இயைக்க. மதி - பிறை. தெள்நீர் - தெளிந்த
கங்கைநீர். சடைக்கரந்து - சடையில் மறைத்து தேவிபாகம் பொருந்தி -
தேவியினது பாகத்தைத் தான் பொருந்தி, பொருந்தாத வேடத்தால் -
காட்டில் உறைவதற்கு ஒவ்வாத கோலத்தால். புரிந்த - விரும்பிய. ஏலம் -
வாசனைப் பொருள்களுள் ஒன்று. ‘தக்கோலம் தீம் பூத் தகைசால்
இலவங்கம். . . கப்பூரம் சாதியோடு