பக்கம் எண் :

821

2290.



கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.   11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: மூன்று கண்களை உடைய முதலோனாகிய
சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி
ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும்
தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற
புகழாளர் ஆவர்.

     கு-ரை: கண்ணு மூன்றும் - முக்கண்ணும். உடை - உடைய.
ஆதி -முதல்வன். உம்மை இனைத்தென அறிந்த சினைக்கு வினைப்
படுதொகுதியின் வேண்டுவது. (தொல். சொல்.33) உடை - குறிப்பு வினை.
வண்ணம் மூன்றும் - மெலிவு, சமன், வலிவு என்பவை. இசை பாடுவார்,
இம்மூன்றும் தெரியாது பாடுவரேல் அவ்விசை, கேட்பவரை எழுப்பும்
விசையுடையதாகும்.

திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

திருப்பொய்கை

இழிந்த தேவரை யாமெலாந்
   தேவரென் றேத்திய தடுமாற்ற
மழிந்து போம்வகை யையனைக்
   காட்டிநின் றழுதவன் றனைக்காக்க
மொழிந்த நாண்மலர்ச் சீறடிப்
   பேதையார் முகின்முலைத் திருஞானம்
பொழிந்த பான்மணந் தன்மண
   மாக்கிய பொய்கையங் கரைதானே.

- ஸ்ரீ மாசிலாமணிதேசிக சுவாமிகள்.