பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப்
பெருமானார் திருஆமாத்தூரையும் திருக்கோவல்
வீரட்டத்தையும் வழிபட்டு, திரு அறையணி நல்லூரை அணைந்து ஏத்தி
அடியார் அன்பின் மேன்மையை உலகம் அறிந்துய்யப் பாவலர்ந்த செந்தமிழ்
கொண்டு பரவியது இத்திருப்பதிகம்.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 213
பதிக எண்: 77
திருச்சிற்றம்பலம்
2302.
|
பீடினாற்பெரி
யோர்களும்
பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும்
வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார்
சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர்
அங்கையாற்றொழு வார்களே. 1 |
1. பொ-ரை:
அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும்,
வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண்
நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம்
கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப்
பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.
கு-ரை:
பீடு - பெருமை. பேதைமை - அறியாமை. ஈண்டுப் பயண்
பாகுபெயராய் ஆணவத்தையும் இனம்பற்றி மாயை கன்மங்களையும்
உணர்த்திநின்றது. தீதிலா வீடு - முற்றத்துறந்து பற்றற்ற நிலை.
ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய் வீடினால் - விடுதலால். வீடு இலார்
-(அழிவில்லாத) நித்தியர். இளமதி, வெண்மதி - பிறை. சுடலைநீறு -
மகாசங்கார காலத்தில் அனைத்துலகையும் அழித்துப் பொடித்த பொடி.
அழல் - தீயில். பெரியோர்களும் உயர்ந்தார்களும் ஆவார் எவர் என்னில்,
அறையணிநல்லூரைத் தொழுபவர்களே
|