பக்கம் எண் :

836

78. திருவிளநகர்

பதிக வரலாறு:

     சிரபுரத்துவள்ளலார் திருச்செம்பொன்பள்ளியை வணங்கி
மெய்த்தகாதலால் விளநகர் விடையவர் பாதம் பத்தரோடு பணிந்து
பாடியருளிய இசைப்பதிகம் ஈதாகும்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 214                               பதிக எண்: 78

திருச்சிற்றம்பலம்

2313. ஒளிரிளம்பிறை சென்னிமேல்
     உடையர்கோவண வாடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற்
     கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை
     நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி யரவினார்
     மேயதுவிள நகரதே.              1


     1. பொ-ரை: விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர்.
கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும்
புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி
உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும்
பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய
புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும்.

     கு-ரை: ஒளிர் - பிரகாசிக்கின்ற. சென்னிமேல் பிறை உடையர்,
கோவணம் ஆகிய ஆடை உடுத்தவர். குளிர் மழைக்கு இளமை, பெய்து
வெளிறாமை. நளிர் - குளிர்ச்சி. துறை நதிசாதியடை. மிளிர் - பிறழ்கின்ற,
புரள்கின்ற, விளங்குகின்ற. பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள்.
‘பொறியரவம்’ (தி.1 ப.132 பா.2) ‘பொறிகிளர் அரவம்’ (தி.3 ப.92 பா.3).
‘பொறிகிளர் பாம்பு’ (தி.3 ப.101. பா.2). ‘பொறியரவு’ (தி.4 ப.35 பா.6) என்று
பயின்ற ஆட்சியாயிருந்தும், ஆகரங்காட்டிய அகராதியில் அராப் பொறி
இராப்பொறியாயிற்று.