திருவடிகளைச் சிந்தியாது
இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும்
இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து
செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச்
சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
கு-ரை:
நெஞ்சே! மரணமுறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும்
பாக்கியமில்லாத அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல்
ஏறிவந்தருளும் திருநீலகண்டப் பெருமானுடைய திருவாரூரைத் தொழுது
உய்யலாகும். மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத் தொழப்பெறாதே
கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே. மீண்டும்போந்து
தொழப்பெறலாம் என்பது கருத்து. கொண்டு அஞ்சேல் என்பது காரணப்
பொருட்டாய வினையெச்சம். கொண்டு என்பது அஞ் என்னும் முதனிலை
கொண்டது. பவனம்-காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும்
பொருட்டுப் பெருகும். அது மேல்மூச்சு வாங்குகின்றது என்ற
வழக்கினாலும் அறியப்படும்.
நாக்கு
உலர்ந்துபோம். சோடை-வறட்சி, நாக்கு உலர்ந்து
போதலோடு, அதன்கண் எய்தும் உணவை உட்செலுத்த எழமாட்டாமலும்
போம். நா எழாது என்பதில் துவ்விகுதி கெட்டது. ஒருமையாதலின்
வல்லெழுத்து மிக்கது. பன்மையாயின், காக்கை கரவா கரைந்துண்ணும்
(குறள். 527) என்பது போன்று இயல்பாகும். நாவானது பால் முதலியவற்றை
உட்செலுத்தமாட்டாது (வலிகுன்றியது) பற்றி, அருகில் இருப்பவர்
அப்பாலையோ பிறிதோருணவையோ பஞ்சில் தோய்த்து உட்புகுமாறு
பிழிவர். அப்பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப்
பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை அறியாதே
உட்செலுத்தப் பெறுவர். பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிந்தியாப்பேதைமார்
என்க. தோய்த்து என்பதன் மரூஉ, தோய்ச்சு என்பது போலி என்பாருமுளர்.
காய்தல் முதலியவும் இவ்வாறு மருவியுள. சிவன் + அ = சிவஅ; ஆறனுருபு.
தாளிரண்டாதலின் பன்னையுருபு நின்றது. நுனகழலிணை (திருவிசைப்பா. 7)
அட்ட-பிழிந்து
ஒழுக்க. கவனம்-விரைவு. கண்டனவன் எனப்
பிரிக்காமல் கொள்வதே பொருத்தம். பிரித்துச் சுட்டுதல், வேண்டாதது.
உய்யலாம் மையல் என்க. மையல் கொண்டஞ்சல் உய்யலாம் என்பாருமுளர்.
பேதைமார் போலாமையை அவமிலா நெஞ்சமே (பெரிய. புரா. 518)எனச்
சேக்கிழார் சுவாமிகள்
|