பக்கம் எண் :

859

80. திருக்கடவூர் மயானம்

பதிக வரலாறு:

     காழியார் வாழவந்தருளிய மறைவேந்தர் திருநாவுக்கரசு நாயனாரொடு
திரு அம்பர் மாகாளம் முதலியவற்றை வழிபட்டுத் தொண்டர்களோடு
திருக்கடவூரையடைந்து காலனையுதைத்த கால்மலர் வணங்கிச்
“சடையுடையான்” எனத் தொடங்கிப் பாடிப்பரவி அரிதிற்போந்து
நண்புடைய குங்கிலியக் கலய நாயனார் திருமனையடைந்து விருந்தமர்ந்த
நாளில் திருமயானத்தையும் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 216                              பதிக எண்: 80

திருச்சிற்றம்பலம்

2335.







வரியமறையார் பிறையார்
       மலையோர்சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார்
       எறியுமுசலம் உடையார்
கரியமிடறு முடையார்
       கடவூர்மயான மமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார்
       அவரெம்பெருமா னடிகளே.    1



     1. பொ-ரை: இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர்.
பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு
கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை
ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில்
எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர்
எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.

     கு-ரை: வரிய மறையார்-வரிகளையுடைய வேதியர். வரிய-
சிரேட்டமுடைய எனலும் பொருந்தும், மலையை ஒரு சிலையாக வணக்கி
என்க. சிலை-வில். வணக்கி-வளைத்து. மதில்கள் எரிய எய்தவர். எறியும்
முசலம்-வீசும் உலக்கை. மிடறு - கழுத்து.