பக்கம் எண் :

863

2341.







பாசமான களைவார்
     பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பா
     ரலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போன் மிடற்றார்
     கடவூர்மயான மமர்ந்தார்
பேசவருவா ரொருவர்
     அவரெம்பெருமா னடிகளே.    7



     7. பொ-ரை: பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம்
போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த
விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்க
வரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

     கு-ரை: பாசம் ஆன களைவார்-மலம் ஆயின ஐந்தையும்
போக்குவார். ஆணவம், மாயை, கன்மம் என்று மும்மலமும், அவற்றையே
மாயேயம், திரோதான சத்தியுடன் கூட்டி ஐம்மலமும் உண்டு என்பர்.
சிவஞானமாபாடியம். சூ.2.அதி.3.பார்க்க. ‘மலங்கள் ஐந்தாற் சுழல்வன்’
(திருவாசகம் 133).

     ஆன-வினைப்பெயர். பரிவார்க்கு-அன்பர்க்கு. பரிவு-அன்பு.
அமுதம் அனையார்-அமிர்தத்தைப் போல்பவர். ஆசைதீர-மூவாசையும்
(மண், பொன், பெண்) ஒழிய. அலங்கல்-மாலை. காசை மலர்-காயாம்பூ;
திருநீல கண்டத்துக்கு ஒப்புரைப்பது மரபு.

     19-4-54 திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் 8-05 வரையில்
இத்தருமை ஆதீனத்து 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமண்ய
தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், தரிசனார்த்தம் வந்த
எழுத்தாளர் பலருக்குக் காட்சிகொடுத்து, செவியறிவுறுத்தி அருளியவற்றுள்,
இடையில் இத்திருப்பாடலை எடுத்துக் காட்டி, நயம் பல கூறிய போது,
அடியே மெய்ம்மறந்து உருகி நின்றேம். ‘ஆசை தீரக் கொடுப்பார்’
என்றதற்குக் கூறிய நயம், அக்குருநாதர் திருக்கை வழங்கப்பெற்ற
அடியேங்களுக்கோ அநுபவப் பொருளாயிருந்தது.