பக்கம் எண் :

867

81. திருவேணுபுரம்

பதிக வரலாறு:

     137-ஆம் பதிகத் தலைப்பிற் காண்க.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 217                              பதிக எண்: 81

திருச்சிற்றம்பலம்

2346.







பூதத்தின் படையினீர்
     பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தி னொலியொடு
     மும்பர்வா னவர்புகுந்து
வேதத்தி னிசைபாடி
     விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம்
     பதியாகக் கொண்டீரே.           1


     1. பொ-ரை: பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை
அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி
மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே!
நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: பூதகணங்களை உடையீர், கொன்றைப்பூ மாலையை 
அணிந்தீர். கடல் முழக்கத்தொடும் உம்பரும் வானவரும் உட்புகுந்து
வேதமுழக்கஞ்செய்து மணமலர்களைத் தூவி வழிபடும் திருவடியை
உடையீர். வேணுபுரத்தைத் திருப்பதியாகக் கொண்டு
எழுந்தருளியிருக்கின்றீர், பூதகணம், கொன்றைப் பூமாலை
சிவபிரானுக்குள்ளவை. வேணுபுரம் கடலிடத்ததாகலின் ஓதத்தின்
ஒலியோடும் வேதத்தின் இசைபாடி எனப்பட்டது. ‘உம்பர், வானவர்’
உம்பரும் வானவரும். உம்மைத் தொகை. உம்பரும் வானவரும் உடனே
நிற்கவே எனக்குச் செம்பொனைத் தந்தருளி (தி.7 பதி,25 பா.2).
’ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத்
தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள்
எல்லாம் பிறவாநாளே’ (தி.6 பதி.1 பா.10.) ‘அண்டர் வாழ்வும் அமரர்
இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்’ (தி.5