பக்கம் எண் :

871

2352.







நீலஞ்சேர் மிடற்றினீர்
     நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர்
     கொடுங்காலன் றனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனி
     யழகார்வேணு புரமமருங்
கோலஞ்சேர் கோயிலே
     கோயிலாக்கொண்டீரே.      7
2353.







இரைமண்டிச் சங்கேறுங்
     கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய
     விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைமண்டிப் பேரோதங்
     கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர
     மேயமர்ந்து மிக்கீரே.       8


     7. பொ-ரை: நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே,
நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை
உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய
கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால்
விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக் கொண்டு
அமர்ந்துள்ளீர்.

     கு-ரை: நீலஞ்சேர் மிடற்றினீர்-திருநீலகண்டத்தீர். கோலம்-அழகு.
ஆலம்-நீர், கலப்பையும் ஆம். கோலம்-வளைவு.

     8. பொ-ரை: சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில்
ஏறி இளைப்பாறும் கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர்
மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு
கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே,
நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய
மணம் மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக் கொண்டு அமர்ந்து
பெருமையால் சிறந்து விளங்குகின்றீர்.