பதிக
வரலாறு:
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசரொடும் திருவாரூர் முதலிய
தலங்களை வழிபட்ட காலத்து, இத் திருத்தேவூரை அணைந்து
பாடியருளியதும் முற்பதிகத்தின் ஈற்றில் அருளியவாறே தமது சிவபக்தியின்
உறைப்பை இதன்கண் ஒவ்வொரு திருப்பாட்டின் ஈற்றிலும் விளங்கவைத்துப்
பாடியருளிச், சைவர் எல்லோரும் சிவபெருமான் திருவடியே சேரப்
பெறுமாறுணர்த்துவதும் ஆகும் இத்திருப்பதிகம்.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 218
பதிக எண்: 82
திருச்சிற்றம்பலம்
2356.
|
பண்ணி
லாவிய மொழியுமை
பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம
லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு
மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன
மல்லலொன் றிலமே. 1 |
1. பொ-ரை:
இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும்,
எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும்,
விடையூர்தியும், ஆகிய, தெளிந்த நிலவொளியைத் தரும் மதிதவழும்
மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை
நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம்.
கு-ரை:
‘பண்ணிலாவிய மொழியுமைபங்கன்’ என்றதில், இத்தலத்தின்
தேவிக்கு வழங்கிய திருப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்னோர்
‘மதுரபாடணியம்மை’ என்று மாற்றினர். விண்ணில் வானவர் என்பது
தேவகணம் எல்லாவற்றையும் குறித்தது. கோன்-சிவபெருமான். விமலன்
-மலரகிதன். விடையூர்தி-எருதூர்பவன். தெள்நிலா-தெளிந்த நிலவுடைய
மதி-பூரணசந்திரன், பிறையுமாம்.
|