பக்கம் எண் :

882

83. திருக்கொச்சைவயம்

பதிக வரலாறு:

     137ஆவது பதிகத் தலைப்பிற் காண்க.

பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 219                             பதிக எண்: 83

திருச்சிற்றம்பலம்

2367.







நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன்
     நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ண மொருகூறுருக்கொள்
     திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
     விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
     கொடியாடு கொச்சை வயமே.         1


     1. பொ-ரை: நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை
நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற
கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட
வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக்
கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின்
ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும்
மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும்.

     கு-ரை: நீலநன்மாமிடற்றன்-திருநீலகண்டத்தர். சினத்த-கோபத்தை
உடைய மா-யானை. சேல் அன்ன கண்ணி-சேல் மீன் போன்ற
கண்களையுடைய உமாதேவியார். கூறு-பாகம். உருகொள் திகழ்தேவன்
என்க.

     கண்ணுக்கு வேல் ஒப்பு. மகளிர் விளையாட்டோசையும்,
விழாவினோசையும், வேத முழக்கமும், கடலோசையும் உடைய வீதிகள்,
பதிதான் கொச்சைவயம் என்க. முதல் 9 பாக்கட்கும் இவ்வாறே கொள்க.