பக்கம் எண் :

893

2382.







மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து
       மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை
       பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப
       அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு
       நனிபள்ளி போலும் நமர்காள்.       6


     கு-ரை: ஒரு காதில் சங்கத்தோடும் ஒருகாதில் சங்கக் குழையும்
அணிந்தமை குறிக்கப்பட்டது. கனல்-தீயில். வீடுடன் எய்துவார்கள்
பேரின்ப வீட்டை விரைந்து எய்தும் வைதிக சைவர்கள் மனைவியுடன்
நீராடச் சென்று அடையும் வைதிகர்கள் எனலுமாம். விரால் தெளித்தல்-
கை(விரல்) களால் அர்க்கியங்கொடுத்தல். நாடுடன்நாடு வெள்ளமா ஆரும்
குடகுநாட்டில் தோன்றிக் கொங்குநாட்டில் பாய்ந்து சோழநாட்டில் கடலை
அடைவது நோக்கின் நாடுடன்நாடு காவிரி வெள்ளம் நிறையும்.

     மேதினிக்கு வளம் நிறைத்துக் குறைந்த நீருடைமையால், கடல்
வயிறு நிறையாத காவிரி ஆயிற்று (பெரிய. திருமூல.8.) என்றனர்.
‘பொன்னி’ என்றது நீரின் செம்மையும் மணலின் பொன்மையும் பற்றி
வழங்கிய காரணப்பெயர். நாடுடன் ஆடு வெள்ளம் என்றுகொண்டு,
கங்கையிற் புனிதமாய காவிரியில் நாட்டினர் ஒரு சேரப்போந்து
நீராடுதலைக் குறித்ததாகக் கொள்ளலும் ஆகும்.

     6. பொ-ரை: மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச்
சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒருபாகமாகக்
கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான்
எழுந்தருளிய நகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும்
மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும்
நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும்
காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும்.

     கு-ரை: ஊகம்-கருங்குரங்கு, குரங்குமாம். மந்தி-பெண் குரங்கு.
உகளும்- பாயும், குதிக்கும். இடறி-எற்றி, தள்ளி. நாகம்-நாகமரம். ஆரம்-
சந்தனமரம். பாம்பும் (நாகரத்நமும்) முத்தும் ஆம். வாருபுனல்-
கொழிக்கும்நீர்.