பக்கம் எண் :

894

2383.







தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
     கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
     பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
     பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
     நனிபள்ளி போலும் நமர்காள்.        7
2384.







வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
     மதியா வரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
     பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை
     யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
     நனிபள்ளி போலும் நமர்காள்.        8


     7. பொ-ரை: பெருமை பொருந்திய தண்டு, சூலம், அனல்
உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய், வகையாக அமைந்த வன்னி
கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும்
திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர், புகையாக எழுந்த மணத்துடன்
மாலை புனைவார்கள் புகழும் ஓசையும், பணிந்து போற்றுவார் பாடும் பாடல்
ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழபடப்பைகளை
உடைய நனிபள்ளியாகும்.

     கு-ரை: தகை-தடை. தண்டு-தண்டாயுதம். சிவிகையுமாம்.
கொடுகொட்டி -திரிபுரதகனகாலத்திற் சிவபிரான் ஆடிய திருக்கூத்து.
கந்தம்-மணம். நகை -வெண்மை.

     8. பொ-ரை: வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த
ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல்
வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால்
அடர்த்த பெருமான் உகந்த நகர், கீழுலகிலும் மேலுலகிலும் தனக்கு நிகர்
யாருமில்லை என்கின்ற நீதிவடிவினனாகிய அவனை நன்மைமிக்க
தாண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும்.