பக்கம் எண் :

899

2390.







உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து
     உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென்
     உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
     திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே.               3



“ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை
 தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும்
 மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார்
 பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே.”

என்னுஞ் சோதிடநூற் பாட்டாலுணர்க. கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார்
அவர்கள் எழுதிய அகத்தியர் தேவாரத்திரட்டின் உரையில் உள்ளதும்,
தமிழ்ப்பொழில்-துணர் 7 8 9 இல் பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை
அவர்களும் எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய
கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில்
குறிக்கப்பட்டதாகும், ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை
முதலாக்கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை. அதனொடு ஒன்று சுவாதி.
அதிலிருந்து முன் ஏழு ஆயில்ம். அதற்குப் பதினெட்டு பூரட்டாயத்.
அதற்குமுன் ஆறு பூராடம் என்றும், உடனாய நாள்கள்: பரணி, கார்த்திகை,
மகம், பூரம், விசாகம், கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.

     3. பொ-ரை: அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி
பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை,
திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு
வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால்
திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன
பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் அடியாரவர்கட்கும்
மிகவும் நல்லனவாகவே தரும்.

     கு-ரை: உருவளர் பவளமேனி-அழகுவளரும் பவளம் போன்ற
செம்மேனியில், கலையதூர்தி-துர்க்கை, நெதி-திரவியம்.