பக்கம் எண் :

906

86. திருநாரையூர்

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கடம்பையை வழிபட்டபிறது
நலந்திகழ் நாரையூரை நண்ணி நம்பரைக் கும்பிடும் விருப்பொடு குறுகி
வணங்கிப் பாடியருளிய செந்தமிழ் மாலை இத்திருப்பதிகம்.

பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 222   பதிக எண்: 86

திருச்சிற்றம்பலம்

2399.







உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம
     செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண
     மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து
     வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
     திருநாரை யூர்கை தொழவே.    1


     1. பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களைச்
செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ்சினை உண்ட
சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு;
மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள
பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.

     கு-ரை: உரையினில் வந்த பாவம்-வாக்கால் வந்த தீவினைகள்.
உணர்நோய்கள்-(மனத்தால்) நினைப்பால் உண்டான தீவினைகள்.
செயல்தீங்குகுற்றம் - (காயத்தால்) தீச்செயல்களால் வந்த தீவினைகள்.
தீங்கு செயல் என மாற்றுக. பாவம், நோய்கள், குற்றம் மூன்றற்கும் ‘உம்ம’
என்னும் ஆறனுருபு ஏற்ற சொல் பொதுவாய் நின்றது. உம்முடைய பாவம்
நோய்கள் குற்றம் என்க. செயல் தீங்கு குற்றம் - செயலது தீங்காலாகும்
குற்றமென விரித்தலும் ஆகும்.