பக்கம் எண் :

913

2409.







எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை
     பெருமானை யுள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
     திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
     உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
     துளதென்பர் செம்மை யனிரே.       11


                      திருச்சிற்றம்பலம்

     கு-ரை: வெளியாக்கும்-ஒளியைஆக்கும், “அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே” (சிவப்பிரகாசம்-காப்பு)
உன்னி உணரும்-தியானித்து உணருங்கள். முன்னி எனப்பிரித்தலும் ஆம்.
அதற்கு நினைந்து என்றும் முந்தி என்றும் கொள்க. உணரும்;- நிகழ்கால
உம்மீறு அன்று. எதிர்காலம் உணர்த்தும் முன்னிலைப் பன்மை. சிவக. 808
உரை-சமணசாக்கிய சமயங்களின் கொள்கைகள், செடி-குணம் இல்லாமை.
கைதொழ வெளியாக்கும் அதனால் ஆடியின் பெருமையை உன்னி உணரும்
என்று இயைக்க.

     11. பொ-ரை: தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய்,
எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின்
திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய
திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான
சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும்
திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.

     கு-ரை: எரி. . . உருவானை’-தீயைப் போலும் ஒப்பற்ற அழகிய
தாய நிறத்தை உடையவனை, ‘அழல்வண்ணன்’ என்பது திருநாமம்.
எந்தை பெருமானை உள்கித் திருநாரையூரைக் கைதொழுவான் ஆகிய
மறைஞானசம்பந்தன் உரை(த்த) மாலை பத்தும் மொழிவார் செம்மையாகிப்
பேறுமிக்கதுள்ளது என்பராய்ச் செம்மையினர் ஆவர் என ஆக்கம்
விரித்து முடிக்க உள்குதல் கைதொழுதல் இரண்டும் மொழிவார்க்கு ஏற்றி
உரைத்தலும் பொருந்தும். அப்பொருட்குத் தொழுவான் என்பது
வினையெச்சமாகும். முன்னைய பொருளுக்கு வினையாலணையும் பெயர்.