பக்கம் எண் :

922

 88. தென்திருமுல்லைவாயில்

பதிக வரலாறு:

    திருவெண்காட்டில் மெய்ப்பொருளாயினாரை வழிபட்ட
முத்தமிழ்விரகர் பத்தராம் அடியார் சூழத் திருமுல்லைவாயில் நித்தனாரை
வணங்கிப் பாடிச் சாத்திய செந்தமிழ் மாலை இத்திருப்பதிகம்.

                 பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 224   பதிக எண்: 88

                     திருச்சிற்றம்பலம்

2421.







துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
     நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த
     உமைபங்கன் எங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
     கமலங்கள் தங்கு மதுவிற்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடும்
     திருமுல்லை வாயி லிதுவே.          1


     1. பொ-ரை: விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம்
பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும்
பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய
எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில்
மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை
வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும்.

     கு-ரை: துளி-விஷத்துளி. நிறம்:- ஈண்டுக் கருமை. தெளி-தெளிவு,
தேறல்.

     ஊர்:- எழுவாய். (திருமுல்லைவாயிலாகிய) இது:- பயனிலை, இதுவே
அரனூர் எனலுமாம்.