பக்கம் எண் :

933

2435. கடிகொள் கூவிள மத்தங்
     கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற்
     புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொ ணீடொலி சங்கி
     னொலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக்
     கொச்சை வயமமர்ந் தாரே.          4
   
2436. ஆடன் மாமதி யுடையார்
     ஆயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி
     வையக மிடுபலிக் குழல்வார்
ஆடன் மாமட மஞ்ஞை
     யணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த
     கொச்சை வயமமர்ந் தாரே.         5


     4. பொ-ரை: மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின்
ஒலியோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட
கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில்
விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற
சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள
மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை
வழங்கியவர்.

     கு-ரை: மத்தம் கமழ்சடை. மார்பில் புனைதல்:- முதற்பாட்டின்
குறிப்பிற் காண்க. கடி-மணம் (விவாகம்). கலை-வேதம் முதலிய கலை.
துதைந்து-நெருங்கி.

     5. பொ-ரை: ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத்தோடு
மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில்
அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர்.
பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி
உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர்.