பக்கம் எண் :

938

90. திருநெல்வாயிலரத்துறை

பதிக வரலாறு:

     திருமுதுகுன்று, திருப்பெண்ணாகடம் பணிந்து திருவரத்துறை
வரும்போழ்து, (ஒவ்வொருகால், தந்தையார் தோள் மேல் ஏறிவரும்)
பிள்ளையார் பாததாமரை நோதலையும் நோக்காது பையநடந்தார்.
சிவனருளால், அரத்துறை அந்தணர் கண்டவாறு, ஞானவேந்தர் ஏற,
முத்துச் சிவிகையும், அவர்க்குநிழலிட முத்துக்குடையும், ‘தென்தமிழ்
விளங்கவந்த திருக்கழுமலத்தான் வந்தான் . . . வந்தான்’ என்று ஊத
முத்துச் சின்னங்களும் இருந்தன. அன்பர் பலரொடும் சென்று அவற்றை
ஆளுடைய பிள்ளையாரிடம் அரத்துறை அந்தணர் கொடுத்தனர். அவர்
மன்றுளார் அருள் என்று வணங்கினார். ‘எந்தையீசன்’ என எடுத்து
‘இவ்வருள் வந்தவாறு மற்று எவ்வண்ணமோ’ என்று சிந்தைசெய்தருளியதே
இத்திருப்பதிகம்.

              பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 226   பதிக எண்: 90

                 திருச்சிற்றம்பலம்

2442.







எந்தை யீசனெம் பெருமான்
     ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற்
     சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக்
     கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
     அரத்துறை அடிகள்தம் அருளே.      1


     1. பொ-ரை: மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு
பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த
சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள்,
எம் தந்தை, ஈசன், பெரியோன், ஆனேற்றை ஏறிவருவோன் என்று
அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி
வழிபடவல்லவர்கட்கு அல்லால், ஏனையோர்க்குக் கைகூடாதது.