பக்கம் எண் :

94

பெறுவதுண்டு. இவ்வழக்கம் திருஞானசம்பந்தப்பெருந்தகையார் காலத்தே
வழக்கில் இருந்தது என்பது அவர் தேவாரத்தால் அறியக் கிடக்கின்றது.
இவ்வூர் மறையோர் இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்.

கல்வெட்டு:

     இத்திருக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள்1 இருக்கின்றன.
இவையனைத்தும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனவாகும்.
இவைகளில் இம்மன்னன் ‘திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும், ஈழமும்,
கருவூரும், பாண்டியன் முடித்தலையுங் கொண்டு வீராபிஷேகமும்
விஜயாபிஷேகமும் பண்ணியருளின திரிபுவன வீரதேவன்’ எனவும்,
‘மதுரையும், கருவூரும், ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய
ஸ்ரீ சோழ கேரளதேவன்’ எனவும் போற்றப்பெற்றுள்ளன.

     இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு ஜெயங்கொண்ட
சோழவளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் திருவழுந்தூர் என்று
குறிக்கப்பெற்றுள்ளது. சிவபெருமானின் திருப்பெயர் திருவழுந்தூர்
உடையார் திருமடமுடைய நாயனார் என்பதாகும்.

     இக்கல்வெட்டுக்கள் திருமடமுடைய நாயனார்க்குக் காவிரி
ஆற்றினின்று நித்தம் திருமஞ்சனம் கொண்டுவந்து திருமஞ்சன சாலையில்
ஒடுக்கித் திருமஞ்சனம் பண்ணுவிக்கக் கடவதற்கு நிவந்தங்கள் அளித்த
செய்திகளைப் புலப்படுத்துகின்றன.

6. திருஅறையணிநல்லூர்

     திருக்கோவலூர் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே
உள்ளது. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. இக்காலத்தில்
அறகண்டநல்லூர் என்று வழங்குகிறது. திருவண்ணாமலை, பண்ணுருட்டி
ஆகிய ஊர்களிலிருந்து திருக்கோவலூர் வருவதற்குப் பேருந்துகள் பல
உள்ளன. அறையணி நல்லூர் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது.
வானளாவிய கோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. திருக்கோவலூரிலிருந்து
வடக்கே 1 கி. மீ. தூரத்தில் ஊர் உள்ளது.


     1குறிப்பு: இக்கல்வெட்டுக்கள் படித்து எழுதப்பட்டன.