பக்கம் எண் :

946

91. திருமறைக்காடு

பதிக வரலாறு:

     திருவாய்மூரில் சிவபிரான் திருவடியைப் பணிந்துபாடி
அங்கு வைகி, கூடும் மெய்யன்பு பொங்க, திருநாவுக்கரசு நாயனாரும்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் சேர்ந்து, மீண்டும், திருமறைக்
காடுற்றனர். அத்தமிழ்மொழித் தலைவரோடு சண்பைநாடுடைய பிள்ளை
அம்மறைக் காட்டுறையும் மணாளன் மலரடிகளை வணங்கிக்கொண்டு
வாழ்ந்திருந்த காலத்தில் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 227   பதிக எண்: 91

                     திருச்சிற்றம்பலம்

2453. பொங்கு வெண்மணற் கானற்
     பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங்
     கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந்
     திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார்
     புகழல திகழ்பழி யிலரே.          1


     1. பொ-ரை: பொங்கியது போன்ற வெண்மையான மணற்பரப்பில்
அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில்
தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து
ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள்
சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள்
பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை.

     கு-ரை: போழும்-பிளக்கும். கலி-ஒலி. மறைக்கு அடை; காட்டிற்கு
அன்று திங்களைச்சூடியதும் திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப்
பழியாகாது. இகழ்பழி:- வினைத்தொகை. இகழாகிய பழி எனலும்
பொருந்தும்.