2465.
|
முயல்வ
ளாவிய திங்கள்
வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல்வ ளாவிய துடைய
வின்னமு தெந்தையெம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக்
கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே. 2 |
2466.
|
தொண்டர்
தண்கய மூழ்கித்
துணையலுஞ் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக்
குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே. 3 |
2. பொ-ரை:
கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக்
குவளைகள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து
இறைவர், முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய
முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய
உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர்.
எமக்குத் தந்தையாகவும் தலைவராகவும் விளங்குபவர்.
கு-ரை:
முயல்-களங்கம். திங்கள் (-சந்திரன்) இடத்திருப்பது.
அரிவை தெரிவை இரண்டும் மாதர் பருவத்தின் வேறுபாட்டாற்பெற்ற
பெயர்கள். கண்மலரும்-கண்போல் பூக்கும். குவளைகள் பூக்கும்
எனலுமாம்.
3. பொ-ரை:
தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி
மலர் மாலை சாந்து, மணப்புகை கொண்டு திருவடிப்பரவி வழிபடக்
கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும்
அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு
வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும். வர்த்த
மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார்.
|