பக்கம் எண் :

960

2474.

பொங்கு தண்புனல் சூழ்ந்து
     போதணி பொழிற்புக லூரில்
மங்குன் மாமதி தவழும்
     வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான
     சம்பந்தன் றண்டமிழ் பத்தும்
எங்கு மேத்தவல் லார்கள்
     எய்துவ ரிமையவ ருலகே.         11


                    திருச்சிற்றம்பலம்

தேரர்.-உரைப்பன-உரைக்கும் புறப்புறச் சமயக் கொள்கைகளை. மெய்-
வாய்மை. விரும்பேல்-விரும்பாதே. செய்-கழனி. வாளையும் கயலும் மீன்கள்.
மை-கருநிறம்.

     11. பொ-ரை: மிகுதியான தண்ணிய நீராலும், மலர்பூத்த
பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய
வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும்
பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர்.

     கு-ரை: போது-பூவின் முன்னைய பருவத்தது. மங்குல்-ஆகாயம்.
மதிதவழும் ஈச்சுரம் என்றுகொண்டு, அத்திருக்கோயிலின் உயர்ச்சியைக்
கருதுக. ஈச்சரத்தாருக்கு ஏற்றின் பிறையணிந்த வரலாறு குறித்ததாம்.
தங்குசீர்-நிலைத்த சீர்த்தி. ‘தண்டமிழ்’ என்றது இத்திருப்பதிகத்தை.

      திருஞானசம்பந்தர் புராணம்

ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
     அப்பதி தன்னில் அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
     வர்த்தமா னீச்சரந் தான்வணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
     உயர்திருத்தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
     பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.

                              -சேக்கிழார்.