பக்கம் எண் :

967

 

சந்த மாயின பாடல்
     தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம்
     பாறுதல் தேறுதல் பயனே.         11

        திருச்சிற்றம்பலம்



ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல்
பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும். அவர்கள் தெளிவு பெறுதல்
வந்துறும் பயனாகும்.

     கு-ரை: சந்தம் ஆயின பாடல்-சந்தப்பாடல். பந்தம் ஆயின
பாவம்-வினைப்பற்று உண்டாவதற்கு ஏதுவான பாவங்கள். பாறுதல்-
ஓடுதல். தேறுதல்-தெளிதல்.

திருஞானசம்பந்தர் புராணம்

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
     நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
     பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
     ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும்போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

           ஆளுடையபிள்ளையார் துதி

காழியர் தவமே! கவுணியர் தனமே! கலைஞானத்து
தாழிய கடலே! அதனிடை அமுதே! அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள்பெற்றனை என்பார்.

                                -சேக்கிழார்.